திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பசுமை பூங்காவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய தி.மு.க.செயலாளருமான அ.ம.துரை வீரமணி தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலை வகித்தார்.
அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபையை முன்னிட்டு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாபெரும் மருத்துவ முகாமும், 108 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இவ்விழாவில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் , மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.
பின்னர் இவர்கள் முன்னிலையில் 108 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
மருத்துவ முகாமில் பொது மருத்துவம், இருதய நோய், எலும்பு மூட்டு, பல், தோல் நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை, கண், காசநோய், குழந்தைகள் நலம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் 24 அரங்குகளில் 17 சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் எக்ஸ்ரே, இசிஜி மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற மருத்துவ முகாமில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
மேலும் வளைகாப்பு நடத்தப்பட்ட 108 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்பட்டது .
மேலும் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 9 மாணவ- மாணவிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட சுகாதார அலவலர் பிரியா ராஜ் , சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மீரா, வட்டார மருத்துவ அலுவலர் ஜி.எஸ்.ராஜேஷ், வில்லிவாக்கம் ஒன்றிய ஆணையர் டபிள்யூ. ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி, ஒன்றிய குழு உறுப்பினர் இரா.வினோத், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஏ.எம்.யுவராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அயப்பாக்கம் ஊராட்சி கிராம சபை முன்னிட்டு 108 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.இவர்களுக்கு சீர் வரிசை பொருட்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , சா.மு.நாசர் , ஆகியோர் வழங்கினார்கள்.உடன் ஆட்சி தலைவர் பிரபு சங்கர், க.கணபதி எம்.எல்.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் அ.ம.துரை வீரமணி, ஒன்றிய கவுன்சிலர் இரா.வினோத் மற்றும் பலர்; உள்ளனர்.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக:
தலைமை நிருபர் B.செல்வாம்பிகை